பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை: ஆப்கானிஸ்தானில் அதிரடி!
ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு தாலிபான் அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரு வருடத்திற்கும் முன், ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியது. அப்போதிலிருந்து பல தடைகளைப் தாலிபான் அரசு விதித்து வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆண்களின் துணை இல்லாமல் வெளியே செல்வதற்குத் தடை, ஆடை அணிவதில் கட்டுப்பாடு, விமானத்தில் செல்வதற்குக் கட்டுபாடு என்று பெண் சுதந்திரத்திற்கு எதிராக பல கட்டுபாடுகளை இந்த அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
பெண்கள் கல்லூரிகளுக்குள் நுழையக்கூடாது!
சமீபத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் நெடா முகமது நதீம் கையொப்பமிட்ட ஒரு அரசாணை அனைத்து உயர் கல்வி நிறுவங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த அரசாணையின் படி, மறு அறிவிப்பு கொடுக்கும் வரை பெண்கள் யாரும் கல்லூரிகளுக்குள் நுழையக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, டீன் ஏஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும் இடைக்கால தடை விதித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. தாலிபான்கள், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் போது பெண்களின் வாழ்க்கையை சிறக்க செய்வோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது அதற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருப்பதாக தாலிபான் அரசை விமர்சகர்கள் சாடி வருகின்றனர்.