காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி
இஸ்ரேல் மீது அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர். எல்லைப்பகுதியில் இருந்த மக்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். ஹமாஸ் மேற்கொண்ட இந்த பயங்கர தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயம் அடைந்தனர் என்று தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, 241 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணையக் கைதிகளாக சிறை பிடித்து சென்றனர் என்று இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. இதனால் கோபமுற்ற இஸ்ரேல் தனது பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 'பணையக்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட தங்கள் மக்களை விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் என்பது கிடையாது' என்றும், 'ஹமாஸ் அமைப்பினை வெற்றியடைய விடமாட்டோம்' என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரேல் கல்வி அமைச்சர்
இத்தகைய சூழலில், காசா அருகே தமர் மண்டல கவுன்சில் என்னும் பகுதியில் 12ம் வகுப்பு வரையிலான முதல் பள்ளிக்கூடம் இன்று(நவ.,9) திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் இஸ்ரேல் நாட்டின் கல்வி அமைச்சர் யோவா கிஷ் இதில் கலந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளியில் மொத்தம் 15 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 6 வகுப்பறைகளும், 7 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 வகுப்பறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 400 மாணவர்கள் வரை படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளியின் அருகே உணவகங்கள், விருந்தினர் விடுதிகள் உள்ளிட்டவைகளும் அமையப்பெற்றுள்ளது.