இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் போது, இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது. இதற்கிடையில், இந்த வாரம் நடைபெற இருக்கும் ஜி20 விருந்துக்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்பதற்குப் பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதற்கு முன் பெயர் மாற்றப்பட்ட நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
துருக்கி-துர்க்கியே
துருக்கிய மொழியில் அந்நாட்டின் பெயர் 'துர்க்கியே' என்று உச்சரிக்கப்படுவதால், அனைத்து மொழிகளிலும் தங்கள் நாட்டின் பெயரை இனி 'துர்க்கியே' என்றே அழைக்க வேண்டும் என்று ஜூன் 2022இல் ஐநா சபையிடம் துருக்கி கோரியது. "துர்க்கியே" என்ற வார்த்தை துருக்கிய நாட்டின் கலாச்சாரம்,நாகரிகம் மற்றும் மதிப்புகளை சிறந்த முறையில் பிரதிபலிக்கிறது என்று அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தயிப்-எர்டோகன் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஹாலந்து-நெதர்லாந்து உலகம் தங்களை பார்க்கும் விதத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் பெயரை ஹாலந்து என்பதிலிருந்து நெதர்லாந்து என மாற்ற டச்சு அரசாங்கம் முடிவு செய்தது. போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் ஆம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்கு மாவட்டம் போன்ற விஷயங்களில் இருந்து உலக கவனத்தை திருப்புவதற்காக அந்நாட்டின் பெயர் மாற்றப்பட்டது.
செக் குடியரசு-செக்கியா
செக் குடியரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து "செக்கியா" என்று அழைக்கப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு அணிகள் தங்கள் நாட்டின் பெயரை பயன்படுத்த "செக்கியா" என்ற பெயர் எளிதாக இருக்கும் என்பதால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதிகாரபூர்வமாக இரண்டு பெயர்களும் அரசாங்க ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டாலும், உலக அரங்கில் அந்நாடு இனி செக்கியா என்றே அறியப்படும். பர்மா-மியான்மர் மியான்மரில் பெரும்பான்மையாக இருக்கும் பர்மன் இனக்குழுவினாலேயே அந்நாடு பர்மா என்று அழைப்பட்டு வந்தது. ஆனால் 1989இல், ஜனநாயக எழுச்சியை கொடூரமாக ஒடுக்கிய இராணுவத் தலைவர்கள் திடீரென்று அதன் பெயரை மியான்மர் என்று மாற்றினர். தற்போது வரை அந்நாட்டில் இராணுவ ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
சிலோன்-ஸ்ரீ லங்கா(இலங்கை)
1972இல் பிரிட்டன் ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்று குடியரசாக மாறிய போது, காலனித்துவத்தில் இருந்து விடுபடுவதற்காக இலங்கை அதன் பெயரை மாற்றியது. 2011இல், இலங்கை அரசு பயன்பாட்டிலிருந்து பழைய காலனித்துவப் பெயரான சிலோன் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது. கம்போசியா-கம்போடியா கம்போடியா அதன் பெயரை ஒருபோதும் மாற்றவில்லை என்றாலும், தற்போதைய கம்போடியா என்ற பெயர் கம்போசியாவிலிருந்து பெறப்பட்ட ஆங்கில ஒலிபெயர்ப்பாகும். 1976ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக நாட்டை கம்போசியா என்று அழைத்தது. ஆனால் அந்த ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, அந்நாடு அதிகாரப்பூர்வமாக கம்போடியா என்று அறியப்பட ஆரம்பித்தது.
பெர்சியா-ஈரான்
இன்றைய ஈரான் பாரம்பரியமாக பெர்சியா என்று அழைக்கப்பட்டது. ரேசா ஷா என்பவர் பெர்சியாவின் மன்னர் ஆனதும், 1935இல் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அந்நாடு ஈரான் என மறுபெயரிடப்பட்டது. அதிகாரபூர்வமாக அந்நாடு ஈரான் என்றே அழைக்கப்பட்டாலும், உணவு, கலை மற்றும் இலக்கியம் போன்ற கலாச்சார விஷயங்கள் குறித்து பேசப்படும் போது, பெரும்பாலும் அந்நாடு பாரசீகம் என்றே இன்று வரை குறிப்பிடப்படுகிறது. இது தவிர, ஸ்வாசிலாந்து-ஈஸ்வதினி(2018), மாசிடோனியா குடியரசு-வட மாசிடோனியா குடியரசு(2019) போன்ற நாடுகளும் தங்களது பெயரை சமீப ஆண்டுகளில் மாற்றியுள்ளன.