உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா
500 நாட்களாகியும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகளை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது. பிப்ரவரி 24, 2022இல் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பினால் இதுவரை கிட்டத்தட்ட 500 குழந்தைகள் உட்பட 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு பணி(HRMMU) நேற்று(ஜூலை 7) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, எனினும், சரியான புள்ளிவிவரங்கள் இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உக்ரைனின் குடிமக்களை கடுமையாக பாதித்து கொண்டிருக்கும் போரின் மற்றொரு பயங்கரமான மைல்கல் இன்று நிறைவடைந்துள்ளது" என்று HRMMUஇன் துணைத் தலைவர் நோயல் கால்ஹவுன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நேற்று கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்
உக்ரைன்-ரஷ்ய போர் ஆரம்பித்து 500 நாட்கள் முடிவடைந்ததை குறிப்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சராசரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது என்று கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜூன் 27அன்று, கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் நான்கு குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேற்கு நகரமான லிவிவில் நேற்று கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். கடந்த வியாழகிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலின் போது குறைந்தது 37 பேர் காயமடைந்தனர். அந்த தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டன.