பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அரசியல் பேரணியின் போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். அரசாங்க கூட்டணி கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-எஃப்(JUI-F) கட்சியை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த குடுவெடிப்பில் 10 கிலோகிராம் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக KP காவல்துறை இன்ஸ்பெக்டர் அக்தர் ஹயாத் கான் தெரிவித்துள்ளார். பஜாவுர் மாவட்டத்தில் ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில்(உள்ளூர் நேரம்) தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
பஜாவுர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பஜாவுர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் பஜாவுரிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மாகாண தலைநகர் பெஷாவரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து, பஜாவுர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தாக்குதல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட பல வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அதில் ஒரு வீடியோவில், மக்கள் ஒரு அரசியல் தலைவருக்காக முழக்கம் எழுப்புவதை காண முடிந்தது. 'ஹஸ்ரத் மௌலானா அப்துல் ரஷீத் சஹாப்... ஜிந்தாபாத், ஜிந்தாபாத்!', என்று அவர்கள் முழக்கம் எழுப்பி கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்
கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அமர்ந்திருந்த மேடைக்கு மிக அருகில் சென்ற பிறகே, அந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும், ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு எதிரியான இஸ்லாமிய அரசு(IS) தீவிரவாத குழு இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் குடியரசு தலைவர் ஆரிப் அல்வி ஆகியோர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு, காயமடைந்த மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை
அடுத்த சில வாரங்களில் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட இருப்பதால், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்கனவே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று மாலை, சீன துணைப் பிரதமர் ஹெ லைஃபெங் உட்பட சில மூத்த சீன அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்லாமிய அரசு(IS) என்னும் தீவிரவாத குழு சமீபத்தில் JUI-F கட்சிக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இருப்பதால், இந்த தீவிரவாத குழுதான் இதற்கும் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
147 பள்ளி மாணவர்களை கொன்ற 2014 தீவிரவாத தாக்குதல்
கடந்த ஆண்டு, JUI-F கட்சியை சேர்ந்த மத அறிஞர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்லாமிய அரசு(IS) குழு ஒப்புக்கொண்டது. 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அதற்கு அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த நான்கு மோசமான தாக்குதல்களில் இந்த குண்டுவெடிப்பும் ஒன்றாகும். 2014ஆம் ஆண்டு பெஷாவரில் உள்ள பள்ளி ஒன்றில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 147 பேர், பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலால் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.