இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி
இத்தாலி: கடந்த வாரம் மத்திய மெரிடியன் கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் 41 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உல்ளது. இந்த விபத்தில் தப்பி பிழைத்தவர்கள் தற்போதுதான் இத்தாலிய தீவான லம்பேடுசாவை சென்றடைந்துள்ளனர். மூன்று குழந்தைகள் உட்பட 45 பேரை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதாக தப்பி பிழைத்த நான்கு பேர் மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இடம்பெயரும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் துனிசியாவின் ஸ்ஃபாக்ஸில் இருந்து கடந்த வியாழக்கிழமை காலை அவர்களது படகு புறப்பட்டிருக்கிறது. ஆனால், கிளம்பிய சில மணிநேரத்திற்குள் படகு விபத்துக்குள்ளானதாக தப்பி பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.
அதிக அளவிலான புலம்பெயற்பவர்களின் படகுகள் ஐரோப்பாவில் விபத்துக்குள்ளாகி வருகிறது
ஐவரி கோஸ்ட் மற்றும் கினியாவைச் சேர்ந்த மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் இந்த விபத்தில் இருந்து தப்பி பிழைத்துள்ளனர். படகு விபத்துக்குள்ளானதும் அவர்கள் ஒரு சரக்குக் கப்பலால் மீட்கப்பட்டதாகவும், பின்னர் இத்தாலிய கடலோர காவல்படை கப்பலுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடலோர காவல்படை இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இரண்டு கப்பல் விபத்துக்குள்ளானதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் கடலோரக் காவல்படை தெரிவித்திருந்தது. அதுவும் இதுவும் ஒரே சம்பவமா அல்லது வெவ்வேறு சம்பவங்களா என்பதும் இதுவரை சரியாக தெரியவில்லை. சமீபகாலமாக அதிக அளவிலான புலம்பெயற்பவர்களின் படகுகள் ஐரோப்பாவில் விபத்துக்குள்ளாகி வருகிறது. சிறிய மீன்பிடி படகுகளில் அதிக ஆட்களை ஏற்றி வருவதே இந்த விபத்துகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.