கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிரீஸ் அருகே உள்ள லெஸ்போஸ் பகுதியில் ஒரு சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியதால் ஒரு பணியாளர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் இருந்து தப்பிய ஒருவர் மீட்க்கப்பட்டுள்ளார். எனினும், 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்களை காணவில்லை. விபத்துக்கு உள்ளாகிய சரக்குக் கப்பல் கொமோரோஸில் பதிவுசெய்யப்பட்டதாகும். அந்த கப்பல் 6,000 டன் உப்பை ஏற்றிக்கொண்டு எகிப்தின் அலெக்சாண்டிரியாவிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எட்டு எகிப்தியர்கள், நான்கு இந்தியர்கள் மற்றும் இரண்டு சிரியர்கள் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் இருந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்தவர்களை மீட்க மீட்பு பணிகள் தீவிரம்
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அந்த கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து, காலை 8.20 மணிக்குப் பேரிடர் சமிக்ஞையை அந்த கப்பல் அனுப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரிடர் சமிக்ஞை அனுப்பிய சிறிது நேரத்தில் லெஸ்போஸிலிருந்து தென்மேற்கே 4 1/2 கடல் மைல்(8 கிமீ) தொலைவில் அந்த கப்பல் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பிறகு, அந்த கப்பல் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கியது. ஆனால், அவர் எந்த நாட்டுக்காரர் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதன்பின், ஒரு எகிப்தியர் உயிரோடு மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், 8-வணிகக் கப்பல்கள், 2-ஹெலிகாப்டர்கள் மற்றும் 1-கிரேக்க கடற்படை போர்க்கப்பல் ஆகியவை உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.