
புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - சீனாவின் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக கருதப்பட்டு வந்த சீனாவில் சமீப காலமாக மக்கள் தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
1980களில் சீனா ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சட்டம் ஒன்றினை இயற்றியது.
இதனால் தற்போது அந்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மக்கள் தொகையில் சமமின்மை இல்லாத காரணத்தினால் மீண்டும் மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கைளை சீனா மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அந்நாட்டு மக்கள் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று 2021ம்ஆண்டு சட்டம் போடப்பட்டது.
முன்னதாக சீனாவில் குறைந்தபட்ச ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு 3நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
30 நாட்கள் விடுமுறை
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன மாகாணங்களின் புது திட்டம்
திருமணங்களை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சீனா புது முயற்சிகளை கையாளுகிறது.
அதன்படி, சீனாவில் சில மாகாணங்களில் இளம் புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேற்கு மாகாணமான கன்சு மற்றும் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணமான ஷாங்க்ஷி உள்ளிட்டவை 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், திருமண விடுமுறைகளை அதிகரிப்பதன் மூலம் கருவுறுதல் விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழக சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகி யாங் ஹையாங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.