ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி
ஜார்ஜியாவின் அல்பரெட்டாவில் வேகமாகச் சென்ற கார் கவிழ்ந்ததால் மூன்று இந்திய-அமெரிக்க மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவரும் 18 வயதுடையவர்கள் ஆவர். கொல்லப்பட்டவர்களில் இருவர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. வேகமாக சென்றதால் தான் அந்த கார் விபத்துக்குள்ளானது என்று அல்பரெட்டா காவல்துறை கூறியுள்ளது. அந்த ஐந்து இந்திய-அமெரிக்க மாணவர்களும் அல்பரெட்டா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர்கள் ஆவர். உயிரிழந்த மாணவர்கள் ஆல்பரெட்டா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த ஆரியன் ஜோஷி, ஸ்ரீயா அவசராலா மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த அன்வி ஷர்மா என அடையாளம் காணப்பட்டனர்.
வாகனம் தலைகீழாக கவிழ்ந்து மரத்தில் மோதி விபத்து
ஜார்ஜியா மாநில பல்கலைக்கழக மாணவர் ரித்வாக் சோமேபல்லி மற்றும் அல்பரெட்டா உயர்நிலைப் பள்ளி மாணவர் முகமது லியாகாத் ஆகியோர் காயமடைந்த மாணவர்கள் ஆவர். போலீசாரின் கூற்றுப்படி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தலைகீழாக கவிழ்ந்து மரத்தில் முட்டியது. ஆர்யன் ஜோஷி மற்றும் ஸ்ரீயா அவசராலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். பின்பக்க பயணியான அன்வி ஷர்மா, நார்த் ஃபுல்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்திற்கு வேகம் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கூறப்பட்டுள்ளது.