கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா. 49 வயதாகும் இவரது மனைவி ஹரிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா முட்டனா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாண சந்தலர் என்னும் நகரில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் சுற்றுலா சென்றுள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கடும் பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் உறைந்திருந்தது. இதனையடுத்து மற்றவர்களை ஆற்றின் அருகில் விட்டுவிட்டு, நாராயணா, அவரது மனைவி ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் மெடிசெடி ஆகிய மூவரும் புகைப்படம் எடுக்கும் நோக்கில் உறைந்த ஆற்றின் மேல் நடக்க துவங்கியுள்ளனர்.
புகைப்படம் எடுக்கும் நோக்கில் உறைந்த ஆற்றின் மேல் நடந்த சுற்றுலாவாசிகள்
இந்நிலையில் திடீரென உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மேல் நடந்த மூவரும் ஆற்றின் உள்ளே விழுந்துள்ளனர். அவர்களை மீட்க அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் பனியின் அடர்த்தி காரணமாக உள்ளே விழுந்த 3 பேரும் ஆற்றில் முழுகி உடனே இறந்துள்ளனர். இதனையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஹரிதாவின் உடலை சில மணி நேரத்திலேயே கண்டறிந்து மீட்டனர். ஆனால், அவரது கணவர் நாராயணா முட்டனா மற்றும் கோகுல் என்பவரது உடல்கள் பல மணிநேர தேடுதலுக்கு பிறகே கண்டறிந்தனர். இந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவிற்கு ஒன்றாக வந்த இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.