இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஜிம்பாப்வே வீரர் கேரி பேலன்ஸ் சாதனை!
ஜிம்பாப்வேயின் புலவாயோவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) ஜிம்பாப்வே வீரர் கேரி பேலன்ஸ் அபார சதம் அடித்தார். 33 வயதான கேரி பேலன்ஸுக்கு டெஸ்ட் வாழ்க்கையில் இது ஐந்தாவது சதமாகும். ஆனால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக ஜிம்பாப்வே அணிக்காக விளையாட தொடங்கிய பிறகு, இது அவருக்கு முதல் சதமாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இரு வெவ்வேறு நாடுகளுக்காக சதமடித்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை கேரி பேலன்ஸ் பெற்றுள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்காக கெப்லர் வெசல்ஸ் இந்த சாதனையை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய கேரி பேலன்ஸ்
இடது கை பேட்டரான பேலன்ஸ், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்ந்து இங்கிலாந்து அணிக்காக 42 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 மற்றும் 2017 க்கு இடையில் இங்கிலாந்துக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் 1000 டெஸ்ட் ரன்களை எட்டிய மூன்றாவது வேகமான பேட்டர் என்ற பெருமையை கொண்டுள்ளார். ஆனால் அவரது ஃபார்ம் மோசமடைந்ததை அடுத்து, 2017இல் அணியிலிருந்து கைவிடப்பட்டார். அதன் பிறகு நீண்ட காலம் வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2022 டிசம்பரில், தான் பிறந்து, வளர்ந்த ஜிம்பாப்வே அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. தற்போதைய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ஜனவரி மாதம் ஜிம்பாப்வேக்காக ஒரு டி20 மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பேலன்ஸ் பங்கேற்றுள்ளார்.