'சூரியனை மேகங்கள் மறைத்தாலும்'; வைரலாகும் யுஸ்வேந்திர சாஹலின் பதிவு
இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், ஆசிய கோப்பை 2023க்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 2023இல் இந்தியா இதுவரை விளையாடிய 12 ஒருநாள் போட்டிகளில் சாஹல் இதுவரை இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடனான தொடரில் சாஹல் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது ஆசிய கோப்பைக்கான அணியிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவர் ஒருநாள் உலகக்கோப்பையில் இடம் பெறுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
யுஸ்வேந்திர சாஹலின் எக்ஸ் பதிவு
தன்னை அணியில் சேர்க்காத நிலையில், பிசிசிஐ ஆசிய கோப்பைக்கான அணியை அறிவித்த சிலமணி நேரங்களுக்கு பிறகு, சாஹல் எக்ஸ் பக்கத்தில் ஒரு எமோஜி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சூரியன் எட்டிப்பார்க்கும் போது மேகங்களின் எமோஜியைப் பகிர்ந்துள்ளார். பின்னர் அது முழுவதுமாக ஒளிர்வது போல் உள்ள நிலையில், சாஹலின் இந்த குறியீடு பதிவு குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூரியன் இறுதியில் பிரகாசிக்கும் மற்றும் தன்னை மீண்டும் நிரூபிக்கும் நேரம் வரும் என்று சமிக்ஞை செய்யும் வகையில் சாஹல் இதை பதிவிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அணியில் குல்தீப் யாதவின் வருகையால், யுஸ்வேந்திர சாஹல் விளையாடும் போட்டிகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அவர் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டு வருகிறார்.