டெஸ்ட் கிரிக்கெட்டில் கோல்டன் டக்கவுட் ஆன ஏழாவது இந்தியர் ஆனார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
அடிலெய்டு ஓவலில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்டின் தொடக்க நாளில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கால், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இந்த கோல்டன் டக்கவுட் மூலம், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணியின் மோசமான சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் கோல்டன் டக் மூலம் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். இந்த துரதிர்ஷ்டவசமான சாதனையுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் கோல்டன் டக் ஆக ஆட்டமிழந்த ஏழாவது இந்திய தொடக்க வீரர் ஆனார். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர், சுதிர் நாயக், டபிள்யூ.வி.ராமன், ஷிவ் சுந்தர் தாஸ், வாசிம் ஜாஃபர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.
பிங்க்-பால் டெஸ்ட் முதல் நாள் ஹைலைட்ஸ்
பகலிரவு முறையில் நடக்கும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. எனினும் சொதப்பலான பேட்டிங்கால் 180 ரன்களுக்கு சுருண்டது. இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி (42) மட்டுமே 40 ரன்களை தாண்டி ஸ்கோர் செய்திருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 86 ரன்களுடன் வலுவாக உள்ளது. நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் லாபுசாக்னே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.