பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சவாலுக்கு தயாராக உள்ளார். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான 21 வயதான அவர், இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அமைப்பில் தன்னை ஒரு முக்கியமான சொத்தாக விரைவாக நிலைநிறுத்திக் கொண்டார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 14 டெஸ்டில் 8 அரை சதம், 3 சதங்கள் உட்பட 1,407 ரன்கள் குவித்துள்ளார். அவர் 2024 ஆம் ஆண்டில் 1,119 ரன்களுடன் இந்தியாவின் டெஸ்ட் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச அளவில் முதலிடம்
சர்வதேச அளவில், இங்கிலாந்தின் ஜோ ரூட் 1,338 ரன்களுடன் 2024 காலண்டர் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் அவரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளார். கூடுதலாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் (2014 இல் 33) என்ற பிரண்டன் மெக்கல்லத்தின் சாதனையை முறியடிக்க இன்னும் 2 சிக்ஸர்கள் மட்டுமே தேவையாகும். பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு தனது தயாரிப்பு பற்றி ஜெய்ஸ்வால் பேசுகையில், ஒழுக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த விராட் கோலியின் ஆலோசனைகள் தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகக் கூறினார்.