Loading...
மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளருடன் மோதல்! யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்படுமா?
மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மோதல்

மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளருடன் மோதல்! யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்படுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2026
06:00 pm

செய்தி முன்னோட்டம்

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் மைதானத்திலேயே காரசாரமான மோதலில் ஈடுபட்டார். போட்டியின் 17வது ஓவரின் கடைசி பந்தில் 45 ரன்கள் எடுத்திருந்த போது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அப்போது அசிதா பெர்னாண்டோ உணர்ச்சிவசப்பட்டு வழியனுப்பும் வகையில் பேசிய வார்த்தைகளால் கோபமடைந்த ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவை நோக்கிச் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பதற்றம்

ஹெட்-பட் மோதலும் மைதானத்தில் ஏற்பட்ட பதற்றமும்

ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்ஸ்வால், மீண்டும் அசிதா பெர்னாண்டோவை நோக்கி நடந்து சென்று நேருக்கு நேர் மோதினார்.

இருவரும் மிகவும் அருகில் வந்து தங்களின் தலைகளை முட்டிக்கொள்ளும் (Head-butt) அளவுக்கு நிலைமை மோசமானது.

உடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த தேவ்தத் படிக்கல் ஜெய்ஸ்வாலைத் தடுத்து நிறுத்த முயன்ற போதிலும், அவர் தொடர்ந்து எதிரணி பந்துவீச்சாளரிடம் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் இலங்கை அணியின் கேப்டன் மற்றும் சக வீரர்கள் தலையிட்டே இருவரையும் பிரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஐசிசி விதிகள்

ஐசிசி நடத்தை விதிகளின் படி என்னென்னப் பிரிவுகள் பொருந்தும்?

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒழுங்குமுறை விதிகளின் படி, மைதானத்தில் எதிரணி வீரர்கள், நடுவர்கள் அல்லது பிற நபர்கள் மீது வன்முறையை வெளிப்படுத்துவது அல்லது காயத்தை ஏற்படுத்தும் வகையில் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவது லெவல் 4 குற்றப் பிரிவின் கீழ் வருகிறது.

ஐசிசி விதிகள் உறுப்பு 2.18 சர்வதேசப் போட்டியில் மற்றவர் மீதான உடல் ரீதியான தாக்குதலையும், உறுப்பு 2.19 மைதானத்தில் நிகழும் எந்தவொரு வன்முறை செயலையும் தெளிவாக வரையறுக்கிறது.

ADVERTISEMENT

தடை வாய்ப்பு

ஜெய்ஸ்வாலுக்கு எவ்வளவு பெரிய தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது?

நடுவர்கள் மற்றும் மேட்ச் ரெஃபரி இந்த சம்பவத்தை ஆய்வு செய்து, இது லெவல் 4 குற்றப் பிரிவு எனக் கருதினால், ஜெய்ஸ்வாலுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஐசிசி விதிகளின் படி லெவல் 4 குற்றச்சாட்டிற்கு குறைந்தபட்சமாக 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.

குற்றத்தின் வீரியம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆயுட்காலத் தடை வரை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை இது லெவல் 2 உடல்தொடர்பு குற்றமாக கருதப்பட்டால் அபராதத்துடன் 1 அல்லது 2 போட்டிகள் தடை கிடைக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT