
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிகள் அட்டவணையில் பெரிய முன்னேற்றம் கண்டது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்த வெற்றியின் மூலம், 3 இடங்கள் முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உயர்த்தியது.
தென்னாபிரிக்காவின் அபார வெற்றிக்குப் பின்னர் இலங்கை ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய ஐந்து அணிகள் 2023-25 சீசனில் இறுதிப் போட்டிக்கான முதல் இரண்டு இடங்களுக்காக போராடுகின்றன.
இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணியின் இடம்
கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வலுவான வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இடத்தை வலுவாக்கியுள்ளது.
எனினும், இன்னும் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் குறைந்தபட்சம் மூன்று வெற்றி மற்றும் ஒரு டிராவை பெற்றால் மட்டுமே, மற்ற அணிகளின் வெற்றி தோல்வி தாக்கம் இல்லாமல் நேரடியாக இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்யும்.
பட்டியலில் நான்காவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முறையே ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ள இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வாய்ப்பை முழுமையாக இழந்துள்ளன.