இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல்
செய்தி முன்னோட்டம்
இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்புக்கான தேர்தல் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் திங்கள்கிழமை (ஜூன் 12) அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மிட்டல் குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவின் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் அதிகாரியாக மகேஷ் மிட்டல் குமாரை நியமிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
தேர்தல் நடத்துவதில் உதவியாக ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பிற ஊழியர்கள் நியமிக்கப்படுவர்." என்று தெரிவித்துள்ளது.
wfi protest issue
இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக போராட்டம்
இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர். கடந்த ஜனவரியில் இதற்காக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அரசின் தலையீட்டால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் ஏப்ரல் முதல் வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிப்பதாக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தனியாக விசாரித்து வரும் டெல்லி போலீசார், வியாழக்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
அதன் பின்னர் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.