வினேஷ் போகத் நேரடியாக தேர்வு செய்யப்பட்டதற்கு இளம் மல்யுத்த வீராங்கனை எதிர்ப்பு
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியனான ஆண்டிம் பங்கால் புதன்கிழமை (ஜூலை 19) வினேஷ் போகத்துக்கு அளிக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனை விலக்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக வினேஷ் போகத் (53 கிலோ) மற்றும் பஜ்ரங் புனியா (65 கிலோ) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிகக் குழு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேரடியாக நுழையும் வாய்ப்பை வழங்கியது. மற்ற மல்யுத்த வீரர்கள் ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடக்கும் தேர்வு சோதனைகள் மூலம் இந்திய அணியில் தங்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும். இது மல்யுத்த வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதிருப்தியை வெளிப்படையாக கூறிய ஹரியானா வீராங்கனை
ஹரியானாவில் உள்ள ஹிசார் பகுதியைச் சேர்ந்த 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் 19 வயதான பங்கல், நீண்ட காலமாக பயிற்சி செய்யாமல் இருக்கும் போது வினேஷ் ஏன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பங்கல், இது தொடர்பாக ஒரு காணொளியை வெளியிட்டு, விலக்கு பெறுவதற்கான அளவுகோல் என்ன என கேட்டுள்ளார். மேலும், வினேஷ் கடந்த ஒரு வருடத்தில் எந்த சாதனையும் செய்யவில்லை என்று பங்கல் காணொளியில் கூறினார். பங்கால் கடந்த ஆண்டு ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று, இந்த பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.