NZvsSA : நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது தென்னாப்பிரிக்கா
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 1) நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிக்கு 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, புனே எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து தென்னாபிரிக்கா பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான தெம்பா பவுமா 24 ரன்களில் வெளியேறினாலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் அபாரமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருவரும் கூட்டாக 200 ரன்கள் சேர்த்த நிலையில், 40வது ஓவரில் குயின்டன் டி காக் சதமடித்து 114 ரன்களில் வெளியேறினார்.
ராஸ்ஸி வான் டெர் டுசென் சதம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அவுட்டானாலும், ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் டேவிட் மில்லர் ரன் வேட்டையைத் தொடர்ந்தனர். ராஸ்ஸி வான் டெர் டுசென் சதமடித்து 133 ரன்களும், டேவிட் மில்லர் அரைசதம் அடித்து 53 ரன்களும் எடுத்தனர். கடைசி 10 ஓவரில் மட்டும் 119 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா, மொத்தமாக 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. மேலும், இது நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவாகியுள்ளது. நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.