ஒருநாள் உலகக்கோப்பை : இது நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வது கன்பார்ம்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நியூசிலாந்து இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இறுதி செய்தாலும், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதிக்கான கதவுகள் திறந்தே உள்ளன. முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி 24 ஓவர்களுக்குள்ளேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் நியூஸிலாந்துக்கான அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சனிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக அந்த அணி வெற்றி பெற்றாலும், தலா 10 புள்ளிகளுடன் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும் என்பதால் நிகர ரன்ரேட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போது நியூசிலாந்தின் நிகர ரன்ரேட் +0.743 ஆக உள்ள நிலையில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூசிலாந்தை முந்த முடியும். அதே நேரத்தில் பாகிஸ்தான் இரண்டாவது பேட்டிங் செய்ய நேர்ந்தால் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும், 2.5 ஓவர்களுக்குள் எட்டினால் மட்டுமே நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேற முடியும்.