ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, புனேவில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார்.
ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முதல் ஓவரில் மூன்று பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
தனது முதல் ஓவரின் இரண்டாவது லிட்டன் தாஸிடம் பௌல்ட் செய்த ஹர்திக், தனது வலது காலால் பந்தை தனது ஃபாலோத்ரூவில் நிறுத்த முயன்றார்.
பந்து எல்லையை எட்டிய உடனேயே, பாண்டியா தனது ரன்-அப்பை நோக்கி தள்ளாடியபடி அசௌகரியத்துடன் காணப்பட்டார்.
இதையடுத்து இந்திய அணியின் பிசியோ அழைக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்குள் பாண்டியா மேலும் ஒரு பந்தை வீசினார். இதையடுத்து பாண்டியா மைதானத்தை விட்டு வெளியேறினார்.
Hardik Pandya injured in ODI World Cup
ஹர்திக் மீண்டும் விளையாட மாட்டார் என அறிவிப்பு
முன்னாள் இங்கிலாந்து கேப்டனும், இந்த போட்டியின் வர்ணனையாளர்களில் ஒருவருமான நாசர் ஹுசைன், இன்னிங்ஸ் முழுவதும் ஹர்திக் பாண்டியா களத்திற்கு திரும்ப மாட்டார் என்று குறிப்பிட்டார்.
இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய 120 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகுதான் அவர் பேட்டிங் செய்ய முடியும்.
இதற்கிடையே, ஹர்திக் பாண்டியா 3 பந்துகளை வீசிவிட்டு வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக எஞ்சிய மூன்று பந்துகளை விராட் கோலி வீசினார்.
இதன்மூலம், கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி பந்துவீசியுள்ளார்.
ஆகஸ்ட் 2017இல் இலங்கைக்கு எதிரான கொழும்பு ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீசவில்லை எனது குறிப்பிடத்தக்கது.