கனமழையால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம்: ரிசர்வ் நாளுக்கு மாறுமா ஆட்டம்?
செய்தி முன்னோட்டம்
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியானது, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகத் தாமதப்பட்டுள்ளது. இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான இந்த முக்கியப் போட்டி பிற்பகலுக்குப் பிறகு மழை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று முன்னறிவிக்கப்பட்ட நிலையில், அது எதிர்பார்த்ததை விட விரைவாக வந்துள்ளது. போட்டி நடுவர்கள் குறைந்தது 20 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்காக இரவு 9 மணி வரை காத்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இரவு 7 மணி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆடுகளத்தைத் தயார் செய்வதற்கு மேலும் நேரம் தேவைப்படும்.
ரிசர்வ் நாள்
இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாள்
எனவே, இன்று ஆட்டம் தொடங்க முடியாவிட்டால், இறுதிப் போட்டியானது ரிசர்வ் நாளான திங்கட்கிழமைக்கு (நவம்பர் 3) ஒத்திவைக்கப்படும். திங்கட்கிழமை ஒதுக்கப்பட்ட ரிசர்வ் நாளிலும் வானிலை சற்று மோசமாகவே உள்ளது. ரிசர்வ் நாளில் 55% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒருவேளை இரு நாட்களுமே மழையால் ரத்து செய்யப்பட்டால், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒருநாள் உலகக்கோப்பையின் இணைச் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையைப் பகிர்ந்து கொள்வார்கள். இரண்டு முறை இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியாவுக்கும், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்காவுக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். இரு அணிகளும் போராடி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளதால், குறைந்தது 20 ஓவர் ஆட்டமாவது நடைபெற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.