ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 2020இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் அணி, தற்போது முதல்முறையாக கோப்பையை வென்றே தீர வேண்டும் எனும் உத்வேகத்துடன் உள்ளது. இந்திய மகளிர் அணி பிப்ரவரி 12ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடன் உலகக்கோப்பை தொடரை தொடங்க உள்ளது. அதன் பிறகு பிப்ரவரி 15 அன்று மேற்கிந்திய தீவுகளுடனும், பிப்ரவரி 18 அன்று இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 20 அன்று அயர்லாந்திற்கு எதிரான கடைசி குரூப்-ஸ்டேஜ் ஆட்டத்தில் விளையாட உள்ளது. குரூப் பியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்தியாவுக்கு உறுதியான வாய்ப்பு உள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கும் வலுவான இந்திய அணி
இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக உள்ளார். இந்திய அணியில் மந்தனா, ஷஃபாலி மற்றும் ஹர்மன்ப்ரீத் என வலிமையான பேட்டிங் ஒருபுறம் இருக்க, தீப்தி மற்றும் ரேணுகா தலைமையில் வலுவான பந்துவீச்சும் உள்ளது. இந்திய அணி 2009, 2010 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை சென்ற நிலையில், 2020ஆம் ஆண்டில் தான் இறுதிப்போட்டி வரை சென்றனர். 2023 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி : ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், அனுகா தாகூர், பூஜாஸ்த்ரா தாகூர் , ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே.