விம்பிள்டன் முதல் சுற்று வெற்றி மூலம் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்
ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனான நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் 2023 தொடரில் தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார். 90 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் பெட்ரோ காச்சினை 6-3, 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் விம்பிள்டனில் 18வது முறையாக முதல் சுற்றில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ரஃபேல் நடாலின் ஃபிரஞ்சு ஓபன் தொடக்க சுற்று வெற்றி சாதனையை சமன் செய்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை பொறுத்தவரை தற்போது ரோஜர் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் 21 தொடக்க சுற்று வெற்றிகளுடன் ஜோகோவிச்சை விட முன்னிலையில் உள்ளார்.
விம்பிள்டனில் தொடர்ந்து 29வது வெற்றியை பதிவு செய்த நோவக் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் தொடர்ச்சியாக பெறும் 29வது வெற்றி இதுவாகும். 2017 ஆம் ஆண்டு அவர் முழங்கை காயத்துடன் தனது காலிறுதி டையில் இருந்து வெளியேறிய பிறகு, விம்பிள்டனில் ஒரு போட்டியிலும் தோல்வியடையவில்லை. விம்பிள்டனில் தொடர்ச்சியாக அதிக வெற்றியை பெற்றவர்களில் ப்ஜோர்ன் போர்க் (41 வெற்றிகள்), ஃபெடரர் (40 வெற்றிகள்) மற்றும் பீட் சாம்ப்ராஸ் (31 வெற்றிகள்) ஆகியோருக்குப் பிறகு, நான்காவது அதிகபட்ச தொடர் வெற்றி பெற்றவராக நோவக் ஜோகோவிச் உள்ளார். மேலும் தற்போதைய முதல் சுற்று வெற்றி மூலம், போட்டி நடக்கும் சென்டர் கோர்ட்டில் ஜோகோவிச் 40வது வெற்றியை பெற்றுள்ளார். இந்த இடத்தில் எந்த வீரரும் இவ்வளவு அதிக வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.