Page Loader
ஆசிய கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம்
சாஹல் சேர்க்கப்படாதது குறித்து ரோஹித் ஷர்மா விளக்கம்

ஆசிய கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2023
04:36 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூட்டாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 21) அறிவித்தனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில், 17 பேர் கொண்ட அணியை அறிவித்து, அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் வாய்ப்பளிக்கப்படாத வீரர்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படாதது கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் சாஹல் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கேப்டன் ரோஹித் ஷர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

rohit sharma explains why dropped chahal

சாஹல் சேர்க்கப்படாதது குறித்து ரோஹித் ஷர்மா மற்றும் அஜித் அகர்கர் கூறியதன் முழு விபரம்

ஆசிய கோப்பைக்கான அணியில் 17 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்றும், அவரைத் தேர்ந்தெடுத்தால் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் கைவிட நேரிடும் என்றும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டி நடக்கும் மைதானங்களில் வேகப்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். அதே சமயம், இந்த தொடரில் இடம்பெறாவிட்டாலும், அஸ்வின், சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உட்பட யாருக்கும் உலகக்கோப்பைக்கான கதவுகள் மூடப்படவில்லை என தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும், அணியில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னரை மட்டுமே சேர்க்க முடியும் எனும் சூழலில் தற்போது குல்தீப் யாதவ் சாஹலை விட முன்னிலையில் உள்ளதால், இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.