விராட் கோலியை மீண்டும் கேப்டனாக்க முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வலியுறுத்தல்
அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது, ரோஹித் ஷர்மாவுக்கு 38 வயது இருக்கும் என்பதால், அதுவரை கேப்டனாக நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த காலங்களில் ஒரு இந்திய கேப்டனை நியமிப்பது என்பது எதிர்காலத்தையும் மனதில் வைத்தே செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவரை விட குறைந்தது 7-8 ஆண்டுகள் குறைந்த வயதுடைய இளைஞரை தேர்வு செய்வதே சரியாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவைப் பொறுத்தவரை, அந்த வயதில் உள்ள ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல் போன்றவர்கள் காயத்தால் அணியில் இடம்பெறவில்லை. 23 வயதான ஷுப்மான் கில் பெயர் தற்போது அடிபட ஆரம்பித்தாலும், கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும் முன்பு, டெஸ்ட் அணியில் அவர் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
மீண்டும் பழைய கேப்டனை களமிறக்க விரும்பும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர்
மேலே குறிப்பிட்ட காரணங்களால் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளதால், தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத், அடுத்த கேப்டனாக மீண்டும் விராட் கோலியை மீண்டும் நியமிக்க ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனான கோலி, தென்னாப்பிரிக்காவில் 1-2 என்ற தொடர் தோல்வி மற்றும் சவுரவ் கங்குலி சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குப் பிறகு பதவியை துறந்தார். ஆனால், தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில், கோலியை மீண்டும் கேப்டனாக்குவது மிகவும் வழக்கத்திற்கு மாறான யோசனையாக இருக்காது என்று எம்எஸ்கே பிரசாத் நம்புகிறார். மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானேவை துணைக் கேப்டனாக்கும்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை மனதில் வைத்து, விராட் கோலியை கேப்டனாக்கும் தெளிவான முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.