சிஎஸ்கே-வின் புதிய 'சிக்ஸர்' மெஷின்: 13 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய உர்வில் பட்டேல் யார்?
செய்தி முன்னோட்டம்
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 13 பந்துகளில் அரைசதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் என்ற சாதனையை படைத்துள்ளார் சிஎஸ்கே வீரர் உர்வில் பட்டேல். சேப்பாக்கத்தை அதிரவைத்த இந்த கில்லாடியின் பின்னணி குறித்துப் பார்க்கலாம். தொடரில் பிளே ஆப் ரேஸில் நீடிக்க வெற்றி கட்டாயத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, உர்வில் பட்டேல் என்ற புதிய புயல் கிடைத்துள்ளது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவிலேயே 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் இந்த இளம் வீரர்.
ரஞ்சி கோப்பை
யார் இந்த உர்வில் பட்டேல்?
குஜராத் மாநிலம் மெஹ்சானா நகரைச் சேர்ந்தவர் உர்வில் பட்டேல். இவர் உள்ளூர் போட்டிகளில் ஏற்கனவே ஒரு அதிரடி மன்னனாக வலம் வந்தவர். சையத் முஷ்டாக் அலி 2024-25 சீசனில் திரிபுரா அணிக்கு எதிராக வெறும் 28 பந்துகளில் சதமடித்தார். இது டி20 வரலாற்றில் வேகமாக அடிக்கப்பட்ட 2வது சதமாகும். அந்தத் தொடரில் 29 சிக்ஸர்களை விளாசி 'சிக்ஸர் கிங்'காகத் திகழ்ந்தார். டி20 மட்டுமின்றி சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான காலிறுதியில் 140 ரன்களைக் குவித்து அசத்தினார்.
மாற்று வீரராக வருகை
சிஎஸ்கே-க்குள் நுழைந்த கதை
உர்வில் பட்டேல் 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்தார், ஆனால் அப்போது அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2025 சீசனில் சிஎஸ்கே வீரர் வன்ஷ் பேடி காயம் காரணமாக விலகியபோது, அவருக்கு மாற்று வீரராக உர்வில் பட்டேல் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். கடந்த சீசனில் அவர் காட்டிய அதிரடியால், 2026 ஏலத்திற்கு முன்பே சிஎஸ்கே அவரைத் தக்கவைத்துக் கொண்டது. இன்று அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றியுள்ளார்.
தந்தைக்குச் சமர்ப்பித்த சாதனை
சிஎஸ்கே-வின் பிளே ஆப் வாய்ப்பு
நேற்று 13 பந்துகளில் அரைசதம் அடித்தவுடன் ஒரு துண்டுச் சீட்டைக் காட்டி ஒட்டுமொத்த மைதானத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதில் "இது உங்களுக்காக அப்பா" என எழுதியிருந்தது. உர்வில் பட்டேலின் தந்தை முகேஷ் பட்டேல் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் முன்னாள் ஓட்டப்பந்தய வீரர். உர்வில்லின் அசாத்திய உடல் வலிமைக்கும், சிக்ஸர் அடிக்கும் திறனுக்கும் அவரது தந்தையே அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். தற்போது 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. அடுத்ததாக லக்னோ (மே 15), ஹைதராபாத் (மே 18) மற்றும் குஜராத் (மே 21) அணிகளுடன் மோத உள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் வென்றால் சிஎஸ்கே உறுதிபட பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும்.