இந்தியாவின் தங்க மங்கை; யார் இந்த டைட்டஸ் சாது?
2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் இலங்கைக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது. இதில் இளம் வேகப்பந்து வீச்சாளர் டைட்டஸ் சாது 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டைட்டஸ் சாது, தனது முந்தைய போட்டியில் ஒரு விக்கெட் எடுத்த நிலையில், இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமானார். டைட்டஸ் சாது வீழ்த்திய கேப்டன் சாமரி அட்டப்பட்டு, அனுஷ்கா சஞ்சீவனி மற்றும் விஷ்மி குணரத்னே ஆகிய மூன்று பேருமே இலங்கை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டாஸ் சாதுவின் பின்னணி
செப்டம்பர் 29, 2004 இல் பிறந்த டைட்டஸ் சாது மேற்கு வங்காளத்தின் சின்சுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். சாது ஒரு மாநில அளவிலான தடகள வீரராக இருந்த தனது தந்தையைப் பின்தொடர்ந்து, ஒரு ஓட்டப்பந்தய வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் நீச்சலிலும் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், பின்னர் கிரிக்கெட்டில் நுழைந்த அவர், 2023ல் நடந்த மகளிர் யு19 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவராக இருந்தார். யு19 உலகக்கோப்பையில், டைட்டஸ் சாது ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு ஓவர்களில் 6 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகி விருதையும் வென்றார்.