Page Loader
இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்? பவுண்டரி கணக்கு விதிமுறை அமலுக்கு வருமா?
இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்?

இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்? பவுண்டரி கணக்கு விதிமுறை அமலுக்கு வருமா?

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 19, 2023
02:05 pm

செய்தி முன்னோட்டம்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியையும், அதன் சர்ச்சைகளையும் யாராலும் மறந்திருக்க முடியாது. இறுதி நிமிடம் வரை அத்தனை டிராமாக்களைக் கொண்டிருந்தது 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கு பெற்ற அந்தப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவித்திருக்க, வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சரிசமமான ரன்களைக் குவித்திருக்க, பவுண்டரி கணக்கு அடிப்படையில் இங்கிலாந்தை வெற்றியாளராக அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம். இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரிடத்திலுமே அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, பல்வேறு தளங்களில் சர்ச்சைகளையும் கிளப்பியது.

ஒருநாள் உலகக்கோப்பை

இன்று இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவித்தால் என்னாகும்? 

இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி வரும் நிலையில், இன்றும் இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவித்தால் என்னவாகும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கிறது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர், பவுண்டரி அடிப்படையில் வெற்றியாளரை முடிவு செய்யும் விதியை ஐசிசி நீக்கி விட்டது. இன்று இரு அணிகளும் சரிசமமாக ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், ஒரு வெற்றியாளர் கிட்டும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர்களே நடத்தப்படவிருக்கிறது. எனவே, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கவலையின்றி போட்டியின் கண்டுகளிக்கலாம்.

கிரிக்கெட்

இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டால்? 

ஒரு வேளை இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டால், மீதமிருக்கும் போட்டியானது நாளை (நவம்பர் 20) விட்ட இடத்திலிருந்து தொடங்கி நடைபெறும். இதற்காகவே நவம்பர் 20-ஐ இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் நாளாக முன்பே அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்றைய போட்டியில் சிறிது நேரம் மட்டும் மழை குறுக்கிட்டு போட்டி நடைபெறும் பட்சத்தில், அதற்காகவே கூடுதலாக 120 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சூப்பர் ஓவர்களுக்காகவும் இந்த கூடுதல் நேரம் பயன்படுத்தப்படவிருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களாவது இன்று விளையாடப்பட வேண்டும். அதற்கு சாத்தியமில்லாத பட்சத்தில் போட்டியானது ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்படும்.