Loading...
இந்தியாவுடன் விளையாடினால் $1 கூட கிடைக்காது! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சிஇஓ கிறிஸ் டெஹ்ரிங் பரபரப்பு குற்றச்சாட்டு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சிஇஓ கிறிஸ் டெஹ்ரிங் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியாவுடன் விளையாடினால் $1 கூட கிடைக்காது! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சிஇஓ கிறிஸ் டெஹ்ரிங் பரபரப்பு குற்றச்சாட்டு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
06:08 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட்டின் தற்போதைய நிதிப் பங்கீட்டு மாதிரியைக் கடுமையாக விமர்சித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி கிறிஸ் டெஹ்ரிங், இந்திய மண்ணில் நடைபெறும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் இருதரப்புத் தொடர் மிகப்பெரிய வணிக வருவாயை ஈட்டினாலும், அதில் பூஜ்ஜியம் தொகையே தங்களுக்குக் கிடைப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்தத் தொடர் மூலம் $20 மில்லியன் முதல் $30 மில்லியன் டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், கரீபியன் வாரியத்திற்கு அதில் ஒரு பைசா கூட ஒதுக்கப்படுவதில்லை என்று விஸ்டன் கிரிக்கெட் நேர்காணலில் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி வாக்களிப்பு

1997 ஐசிசி வாக்களிப்பும், அழிக்கப்பட்ட முதன்மை வருவாயும்

இந்த நிதிப் பிரச்சனையின் பின்னணியை விளக்கிய டெஹ்ரிங், 1997 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட நிதி மாதிரி மாற்றமே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வித்திட்டதாகக் கூறினார்.

1997-க்கு முன்பு வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உலகளவில் பெரும் வரவேற்பு இருந்தது.

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று விளையாடும் போது கரீபியன் அணிக்குப் பிரத்யேக சுற்றுப்பயணக் கட்டணம் வழங்கப்பட்டது.

அதுவே அவர்களின் முதன்மை வருவாயாக இருந்தது. ஆனால், புதிய விதிகளால் போட்டியை நடத்தும் நாடுகளே அனைத்துத் தொலைக்காட்சி ஒளிபரப்பு வருவாயையும் வைத்துக்கொள்ளத் தொடங்கின.

இதனால் கரீபியன் தீவுகளின் முக்கிய வருவாய் ஆதாரம் முழுமையாகப் பறிபோனது.

புறக்கணிப்பு

9-1 என்ற கணக்கில் நிராகரிக்கப்பட்ட கரீபியன் குரல்

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளின் பிரம்மாண்ட மதிப்பைப் புரிந்துகொண்ட பிற ஐசிசி உறுப்பு நாடுகள், தங்களது நாட்டின் உள்நாட்டு ஒளிபரப்பு வருவாயை வேறு எந்த நாட்டிற்கும் பகிர்ந்தளிக்கக் கூடாது எனத் தீர்மானித்தன.

இத்தீர்மானத்தை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் மட்டுமே வாக்களித்த நிலையில், 9-1 என்ற கணக்கில் மற்ற நாடுகள் இம்மாற்றத்தை நிறைவேற்றின.

150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் சந்தை வருவாயை பிசிசிஐ வைத்துக்கொள்ளும்போது, வெறும் சில லட்சங்கள் மட்டுமே மக்கள் தொகை கொண்ட சிறிய கரீபியன் தீவுகளால் அதற்கு இணையான வருவாயை உள்நாட்டில் ஈட்ட முடியாமல் போயுள்ளது.

ADVERTISEMENT

நிதி நெருக்கடி

கடும் நிதி நெருக்கடியில் கரீபியன் கிரிக்கெட்

தற்போதைய ஐசிசி ஒட்டுமொத்த நிதிப் பங்கீட்டில் இந்திய வாரியம் 38% பெறும்போது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வெறும் 5% மட்டுமே கிடைக்கிறது.

இதனால் ஏற்பட்டுள்ள தீவிர நிதி நெருக்கடியால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஊதியத்தில் 25% வெட்டு, உள்நாட்டு ரெட் பால் தொடர்கள் ரத்து மற்றும் 7 மாதக் குறுகிய கால ஒப்பந்தங்கள் போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க நேரிட்டுள்ளது.

இதுவே இளம் கரீபியன் வீரர்கள் தேசிய அணியைப் புறக்கணித்துவிட்டு உலகளாவிய டி20 லீக் தொடர்களில் கவனம் செலுத்த முதன்மை காரணமாக அமைந்துள்ளதாக டெஹ்ரிங் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT