ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை : ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடம்
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். வனிந்து ஹசரங்கா கடைசியாக டி20 போட்டிகளில் கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினாலும், ரஷீத் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஹசரங்கவிடம் முதலிடத்தை இழக்க நேரிட்டுள்ளது. ஹசரங்க 695 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், ரஷித் 694 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
டி20 போட்டிகளில் வனிந்து ஹசரங்க செயல்திறன்
2019ஆம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஹசரங்க, இதுவரை 55 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இரண்டு முறை எடுத்துள்ளார். தனது 89 விக்கெட்டுகளில் 20 விக்கெட்டுகளை உள்ளூர் மைதானங்களில் எடுத்துள்ள நிலையில், 69 விக்கெட்டுகளை வெளிநாட்டு மைதானங்களில் எடுத்துள்ளார். இலங்கை வீரர்களில் லசித் மலிங்கா (107) மட்டுமே ஹசரங்கவை விட அதிக டி20 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். ஹசரங்கா கடந்த ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 19 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் முன்னணி விக்கெட் வீழ்த்தியவர் ஆவார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் இரண்டு முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஹசரங்கா இரண்டு முறை நிகழ்த்தியுள்ளார்.