டெஸ்டில் அதிக ரன்கள்; வீரேந்திர சேவாக்கை விஞ்சினார் விராட் கோலி
டொமினிகாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இரண்டாம் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 36 ரன்களுடன் கலத்தில் உள்ளார். முன்னதாக, இந்த இன்னிங்ஸில் களமிறங்கும் முன், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 21 ரன்கள் எடுத்தால் 8,500 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டும் நிலையில் இருந்தார். இதன் மூலம் தற்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,500 ரன்களை எட்டி, இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது இந்திய பேட்டர் ஆனதோடு, அதிக ரன்கள் எடுத்தவர்களில் வீரேந்திர சேவாக்கை (8,503) பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் சேவாக் மட்டுமே இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் புள்ளிவிபரம்
தனது 110வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வரும் விராட் கோலி, தற்போது 48.93 சராசரியுடன் 8,515 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 28 சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டும் விராட் கோலி 45.15 என்ற சராசரியுடன் 858 ரன்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு எதிராக இரு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் 50 டெஸ்டில் 60.05 சராசரியுடன் 4,144 ரன்களைக் குவித்துள்ளார். சொந்த மண்ணில் 4,000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கோலி கொண்டுள்ளார். வெளிநாடு மற்றும் நடுநிலை மைதானங்களில் 4,371 ரன்களை எடுத்துள்ளார்.