இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர்களில் விராட் கோலி முதலிடம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் இந்தியராக உள்ளார். இந்திய அணியில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களால், விராட் கோலி டி20 அணியில் சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார். எனினும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வரும் விராட் கோலி, ஒரு ஸ்பான்சர் பதிவை வெளியிட சுமார் 12 கோடி ரூபாய் வசூலிப்பதாக ஹாப்பர் ஹெச்க்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாப்பர் ஹெச்க்யூ நிறுவனம் என்பது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பிரபலங்கள் எவ்வாறு வருமானம் ஈட்டுகின்றனர் என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளிட்டு வரும் நிறுவனம் ஆகும்.
உலக அளவில் முதலிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஹாப்பர் ஹெச்க்யூ நிறுவனத்தின் 2023 அறிக்கையின்படி, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கும் ரூ.26.75 கோடி வாங்கி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். லியோனல் மெஸ்ஸி ரூ.21.49 கோடி வாங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். உலக அளவில் டாப் 20 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர், விராட் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஹாப்பர் ஹெச்க்யூவின் இணை நிறுவனர் மைக் பந்தர், இன்ஸ்டாகிராமில் பல ஆண்டுகளாக விளையாட்டு சூப்பர்ஸ்டார்களின் செல்வாக்கு மைதானத்திற்கு அப்பால் மிக அதிகமாக உயர்ந்துள்ளதுதான் இதற்கு காரணம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, பட்டியலில் உள்ள இந்தியர்களில் நடிகை பிரியங்கா சோப்ரா 29வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ.4.40 கோடி வசூலித்து வருகிறார்.