ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஸ் டெயிலரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஒரு கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஸ் டெயிலரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 114 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 115 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் டாப் ஆர்டரில் களமிறங்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இறுதியில் 22.5 ஓவர்களில் இந்திய கிரிக்கெட் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியல்
இந்த போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ரொமாரியோ ஷெப்பர்ட் அடித்த பந்தை ஒற்றைக்கையில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கேட்ச் வைரலான நிலையில், இந்த கேட்சுடன் சேர்த்து விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 142 கேட்சுகளை பிடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ரோஸ் டெயிலரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 218 கேட்சுகளுடன் ஜெயவர்தன முதலிடத்திலும், 160 கேட்சுகளுடன் ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்திலும், 156 கேட்சுகளுடன் முகமது அசாருதீன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.