
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெற்ற 14வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி சிறிது நேரம் மட்டுமே கிரீஸில் நின்ற போதிலும், ஜிடி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
போட்டி தொடங்கும் முன், ஜிடி அணிக்கு எதிராக 344 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலிக்கு இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட்டை (350 ரன்கள்) முறியடிக்க ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
7 ரன்கள்
சரியாக 7 ரன்கள் எடுத்த விராட் கோலி
இரண்டாவது ஓவரில் அர்ஷத் கானிடம் அவுட்டாகும் முன், சரியாக ஏழு ரன்கள் எடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஏழு போட்டிகளில் 351 ரன்கள் எடுத்து பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் 350 ரன்களுடன் (7 போட்டிகள்) ருதுராஜ் கெய்க்வாட்டும், மூன்றாவது இடத்தில் ஐந்து போட்டிகளில் 248 ரன்களுடன் சூர்யகுமார் யாதவும் உள்ளனர்.
மேலும், நான்காவது இடத்தில் 6 போட்டிகளில் 230 ரன்களுடன் சஞ்சு சாம்சனும், ஐந்தாவது இடத்தில் ஆறு போட்டிகளில் 186 ரன்களுடன் ஜோஸ் பட்லரும் உள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய மூன்று ஐபிஎல் அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சாதனையையும் விராட் கோலி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.