ஒருநாள் கிரிக்கெட்டில் பீல்டிங்கில் புதிய சாதனை படைத்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பையில் மற்றொரு புதிய மைல்கல்லை எட்டி சாதித்துள்ளார், ஆனால் இந்த முறை பீல்டிங் துறையில். ஒருநாள் போட்டிகளில் 150 கேட்ச்களை விக்கெட் கீப்பர் அல்லாத நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கோலி 286 போட்டிகளில் 150 கேட்சுகளை எடுத்துள்ளார். இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே (212), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160), மற்றும் இந்தியாவின் முகமது அசாருதீன் (156) ஆகியோர் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் கோலியை விட அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர்களாக உள்ளனர்.
ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் மூன்றாவது அதிக கேட்ச் பிடித்த வீரர்
விராட் கோலி தற்போது 31 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 19 கேட்ச்களை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (28) மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் (24) ஆகியோர் மட்டுமே கோலியை விட அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர்களாக உள்ளனர். மேலும், இந்தியர்களில் விராட் கோலிக்கு அடுத்து 14 கேட்சுகளுடன் அனில் கும்ப்ளே உள்ளார். இதற்கிடையில், கோலி தற்போது பிடித்துள்ள 170 கேட்ச்களில் 106 கேட்ச்களை பல நாடுகள் பங்கேற்கும் பலதரப்பு தொடர்களிலேயே பெற்றுள்ளார். பலதரப்பு தொடர்களை பொறுத்தவரை விராட் கோலியை விட ரிக்கி பாண்டிங் (141), ஜோ ரூட் (116) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (116) ஆகியோர் மட்டுமே அதிக கேட்ச்களை எடுத்துள்ளனர்.