ஓய்வெல்லாம் கிடையாது; மீண்டும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகட் திட்டம்
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு திறந்த கடிதத்தில் மல்யுத்தத்திற்குத் திரும்புவது குறித்த தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக, ஆகஸ்ட் 7ஆம் தேதி பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் இறுதிப்போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஓய்வு முடிவை எடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக வெள்ளிப்பதக்கம் வேண்டி விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டதால் வெள்ளிப் பதக்கமும் மறுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது எக்ஸ் பதிவில் ஆகஸ்ட் 7 அன்று தனது இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவு நேரத்தில் அவரும் அவரது குழுவினரும் எவ்வாறு போராடினார்கள் என்பதை பகிர்ந்துள்ளார்.
வினேஷ் போகட் கடிதம்
வினேஷ் போகட் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "ஆகஸ்ட் 6 இரவு மற்றும் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் விஷயங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சூழ்நிலைகள் ஒத்துவந்தால் 2032 வரை நான் விளையாட முடியும். ஏனென்றால் எனக்குள் சண்டையும் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும். என்னுடைய எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடியாது. நான் எதை நம்புகிறேனோ, அதற்காக, சரியான விஷயத்துக்காக நான் தொடர்ந்து போராடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீண்டும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சனிக்கிழமை இந்தியாவுக்கு திரும்பும் வினேஷ், பாரிஸ் ஒலிம்பிக் குறித்து பேட்டியளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.