தோனியால் மிகவும் எரிச்சலடைந்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்.எஸ்.தோனி தன்னை மிகவும் கோபமும் எரிச்சலும் அடைய செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ஜியோ சினிமாவுக்கு பேட்டியளித்த முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, தோனி எதிரணி பேட்டிங் செய்யும்போது வீரர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவார் என்றார். "நான் சிஎஸ்கேக்கு எதிராக விளையாடியபோது, நான் அவர் மீது மிகவும் எரிச்சல் அடைந்தேன். ஹேசில்வுட் வீசிய பந்தை கணித்து அதை அடிக்க முற்பட்டு அவுட்டானேன். பேட்டரிகள் விளையாட பழக்கமில்லாத பகுதிகளில் விளையாடும்படி அவர் சிந்திக்க தூண்டி விக்கெட்டை விழ வைப்பார்." என்று கூறினார்.
பந்துவீச்சாளர்களையும் வித்தியாசமாக யோசிக்க வைக்கும் தோனி
வழக்கமாக அணியின் கேப்டன்கள் பேட்ஸ்மேன்களை வித்தியாசமாக சிந்திக்க வைப்பார்கள் என்றால், தோனி பந்துவீச்சாளர்களையும் வித்தியாசமாக சிந்திக்க ஊக்குவிப்பார் என்று ராபின் உத்தப்பா கூறினார். தான் சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது மற்றொரு தருணத்தை நினைவு கூர்ந்த உத்தப்பா, ராஜஸ்தான் ராயல்ஸின் தேவ்தத் படிக்கலை தோனி எப்படி விழ வைத்தார் என்பதை நினைவு கூர்ந்தார். "தேவ்தத் பிக்-அப் ஷாட்டை நன்றாக விளையாடினார். அதனால், சரி, அந்த ஷாட்டை ஆடும்படி கட்டாயப்படுத்துவோம் என்று கூறி, ஃபைன் லெக்கை ஒரு லெக்-கல்லி மாதிரியான நிலைக்கு கொண்டு வந்தார். இதை பார்த்த எனக்கு அவர் எங்கே இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டார் என்பது போல் இருந்தது." என்று உத்தப்பா கூறினார்.