யுஎஸ் ஓபன் 2024: 18 ஆண்டுகளில் முதல்முறையாக நான்காவது சுற்றை எட்டாமல் வெளியேறிய நோவக் ஜோகோவிச்
நோவக் ஜோகோவிச் 28ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்த பின்னர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக யுஎஸ் ஓபன் நான்காவது சுற்றை எட்டத் தவறினார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் அலெக்ஸி பாபிரினிடம் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட்களில் தோற்றார். இதன் மூலம் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக, இந்த ஆண்டை கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஏதுமின்றி முடிக்கிறார். மார்ச் மாதத்திலிருந்து தனது முதல் ஹார்ட்-கோர்ட் போட்டியில் விளையாடும் ஜோகோவிச், முதல் இரண்டு செட்களிலேயே பாபிரின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். இதனால் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைக்கலாம் என நினைத்த ஜோகோவிச்சிற்கு இது பின்னடைவாகியுள்ளது.
கார்லஸ் அல்கராஸும் வெளியேற்றம்
2022 சாம்பியனும் மூன்றாம் நிலை வீரருமான கார்லோஸ் அல்கராஸும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறினார். இதன் மூலம், 1973ஆம் ஆண்டுக்குப் பிறகு, யுஎஸ் ஓபனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நான்காவது சுற்றுக்கு முன் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை வீரர்கள் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். 25 வயதான பாபிரின், முதல் முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் நான்காவது சுற்றை எட்டி, அதையும் நோவக் ஜோகோவிச் போன்ற வீரருக்கு எதிராக செய்து டென்னிஸ் உலகை வியக்க வைத்துள்ளார். இதற்கிடையே, ஜோகோவிச் மற்றும் அல்கராஸ் வெளியேறியதால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நியூயார்க்கில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெறும் முனைப்பில் உள்ளார்.