ஐபிஎல் 2024 ஏலம் : ரூ.8.40 கோடிக்கு வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்; யார் இந்த சமீர் ரிஸ்வி?
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளூர் வீரர் ஒருவரை அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடி வரும் சமீர் ரிஸ்வி இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் போன்ற பல அணிகளின் போட்டிக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்போன உள்ளூர் இந்திய வீரர்களின் பட்டியலில் சமீர் ரிஸ்வி இணைந்துள்ளார்.
சமீர் ரிஸ்வியின் கிரிக்கெட் புள்ளிவிபரம்
சமீர் ரிஸ்வி இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடி 49.16 என்ற சராசரியை 134.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 295 ரன்கள் எடுத்துள்ளார். 75* என்பது அவரது சிறந்த டி20 ஸ்கோராகும். அவர் 11 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 205 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையே, தேசிய அணிக்காக விளையாடாத உள்ளூர் இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ஆவேஷ் கான் உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.10 கோடிக்கு 2022இல் அவரை வாங்கியது. மேலும், கிருஷ்ணப்ப கவுதம், ஷாருக் கான், ராகுல் தீவட்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் கடந்த காலங்களில் சமீர் ரிஸ்வியை போன்று அதிக தொகைக்கு ஏலம் போன இதர வீரர்கள் ஆவர்.