கிரிக்கெட்டில் மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்: அண்டர்-19 ஆசியக் கோப்பையில் மோதல்
செய்தி முன்னோட்டம்
துபாயில் நடைபெற்ற அண்டர்-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சு
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா
மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமானத் தாக்குதலால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதில் கனிஷ்க் சௌஹான் ஐபிஎல் 2026 ஏலத்தில் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சாமிகா ஹீனதிகலா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.
பேட்டிங்
விஹான் மல்கோத்ரா - ஆரோன் ஜார்ஜ் அதிரடி கூட்டணி
139 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்க வீரர்களான ஆயுஷ் மத்ரே (7) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (9) ஏமாற்றம் அளித்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த விஹான் மல்கோத்ரா மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்தது. விஹான் மல்கோத்ரா ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் (45 பந்துகள், 4 பவுண்டரி, 2 சிக்ஸர்) மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் (49 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தனர். இந்த ஜோடி பிரிக்கப்படாமல் 114 ரன்கள் சேர்த்து, 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி (139/2) இந்தியாவை வெற்றி பெறச் செய்தது.
இந்தியா vs பாகிஸ்தான்
ஞாயிற்றுக்கிழமை மெகா ஃபைனல்: இந்தியா vs பாகிஸ்தான்
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, நடப்புச் சாம்பியனான வங்கதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21, 2025) துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஏற்கனவே பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.