1,000 கோடி ரூபாய் சூதாட்ட வழக்கு: யுவராஜ் சிங் உள்ளிட்ட பிரபலங்களின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உரிமம் இன்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் '1xBet' ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் தொழிலில் ஈட்டப்பட்டப் பணத்தை மறைப்பதற்காகவும், விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, இன்று (டிசம்பர் 19) சோனு சூத், நேகா சர்மா உள்ளிட்டப் பல திரை நட்சத்திரங்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
விவரம்
யார் யாருடைய சொத்துக்கள் முடக்கம்?
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தற்போது சுமார் ₹7.93 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் தற்காலிகமாக முடக்கியுள்ளது. இதன்படி: யுவராஜ் சிங்: ₹2.5 கோடி ஊர்வசி ரௌதாலா (தாயார் பெயரில்): ₹2.02 கோடி நேகா சர்மா: ₹1.26 கோடி சோனு சூத்: ₹1 கோடி மிமி சக்ரவர்த்தி: ₹59 லட்சம் ராபின் உத்தப்பா: ₹8.26 லட்சம் அங்குஷ் ஹஸ்ரா: ₹47.20 லட்சம் முன்னதாக ஷிகர் தவான் (₹4.55 கோடி) மற்றும் சுரேஷ் ரெய்னா (₹6.64 கோடி) ஆகியோரின் சொத்துக்களும் இந்த வழக்கில் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
1xBet வழக்கின் பின்னணி
இந்த சூதாட்ட செயலி 6,000 க்கும் மேற்பட்ட பினாமி வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திப் பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈட்டியப் பணத்தை அடுக்குமுறைப் பரிமாற்றங்கள் (Layering) மூலம் இந்தியாவுக்கு வெளியேயும் கொண்டு சென்றுள்ளனர். இந்த செயலிகளை விளம்பரம் செய்ததற்காக இந்தப் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டப் பணம், சட்டவிரோதப் பணமாகக் கருதப்படுவதால் அவற்றைப் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது.