இதேநாளில் அன்று : செஞ்சூரியனில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்பு இதேநாளில் (30 டிசம்பர் 2021) செஞ்சுரியனில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும் முகமது ஷமியும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். ஷமி எட்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே நேரத்தில் கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்காவில் தனது அதிகபட்ச ஸ்கோரான 123 ரன்களை இதில் பதிவு செய்தார். செஞ்சூரியனில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற இந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த மைதானத்தில் இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும். மேலும், அந்த மைதானத்தில் வெற்றி பெற்ற ஒரே ஆசிய அணி இந்தியாதான் என்ற சிறப்பையும் பெற்றது.
செஞ்சூரியனில் தோல்வியைத் தழுவிய ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா
2021இல் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செஞ்சூரியனில் வெற்றி பெற்ற நிலையில், 2023இல் நடந்த பாக்சிங் டே போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையில் தோல்வியைத் தழுவியது. ரோஹித் ஷர்மா தலைமையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் டிசம்பர் 26 அன்று விளையாடத் தொடங்கியது. முதல் இன்னிங்சில் கேஎல் ராகுல் சதமடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலி அரைசதம் அடித்தார். எனினும், இதர பேட்டர்களின் சொதப்பல் மற்றும் மோசமான பந்துவீச்சால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.