ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி முன்பு திட்டமிடப்பட்ட அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. தேதியை மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிபி) இருந்து ஒப்புதலைப் பெற்றுள்ளது. தேதியை மட்டுமே மாற்றியுள்ள நிலையில், போட்டி திட்டமிட்டப்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலேயே நடைபெறும். மேலும், இதனுடன் ஹைதராபாத்தில் இலங்கையுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோதும் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இது அக்டோபர் 12 அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 10க்கு மாற்றப்பட்டுள்ளது. மாற்று தேதிகள் இறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்த வார இறுதிக்குள் திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றத்தின் பின்னணி
இந்த ஆண்டு அக்டோபர் 15 அன்று, குஜராத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் நாளாக அமைந்துள்ளது. இரவு முழுவதும் மக்கள் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்பதால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் மோதும் போட்டிக்கான தேதியை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதிய அட்டவணையில் தற்போது இந்தியா-பாகிஸ்தான் போட்டியைத் தவிர, வங்கதேசம்-நியூசிலாந்து, இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டிகளும் நடைபெற உள்ளன. ஒரே நாளில் மூன்று போட்டிகளை நடத்துவது என்பது ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ள நிறுவனங்களுக்கு வணிக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இதர போட்டிகளிலும் மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. எப்படியிருப்பினும், இந்த வார இறுதிக்குள் அனைத்தையும் இறுதி செய்து, டிக்கெட் விற்பனையை தொடங்கும் முனைப்பில் பிசிசிஐ உள்ளது.