இந்திய கால்பந்து ஜாம்பவான் துளசிதாஸ் பலராம் காலமானார்!
இந்தியாவின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான துளசிதாஸ் பலராம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. செகந்திராபாத்தில் தமிழ் பெற்றோர்களான துளசிதாஸ் காளிதாஸ் மற்றும் முத்தம்மா ஆகியோருக்கு அக்டோபர் 4, 1936 இல் பிறந்த பலராம், இந்தியாவுக்காக 14 கோல்கள் உட்பட மொத்தம் 131 கோல்களை அடித்துள்ளார். இந்திய கால்பந்தின் பொற்காலம் என அழைக்கப்படும் 1951-1962ல் அணியில் ஒரு அங்கமாக இருந்த துளசிதாஸ் பலராம், 1956 மற்றும் 1960 இல் இரண்டு ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். 1962இல் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்ற அணியில், இவரது பங்களிப்பு மிகப்பெரியது. அவரது மறைவுக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.