டிஎன்பிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர், டிஆர்எஸ் விதிகள் அறிமுகம்!
ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் டிஎன்பிஎல் தொடர் ஐபிஎல் தொடரை பின்பற்றி இம்பாக்ட் பிளேயர் விதியை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதி அணிகள் தங்கள் இன்னிங்ஸின் போது எந்த நேரத்திலும் ஒரு வீரரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும். முன்னதாக, ஐபிஎல் 2023 சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டு அது நல்ல பலன்களை கொடுத்தது. பல அணிகளும் இந்த விதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டன. ஐபிஎல்லில் இந்த விதியை அமல்படுத்தும் முன்பு, பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட்டில் விதியை சோதித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டிஎன்பிஎல் இப்போது இந்திய கிரிக்கெட்டில் இந்த விதியை பின்பற்றும் மூன்றாவது போட்டியாக மாறுகிறது.
டிஎன்பிஎல் 2023இல் அமலாகும் புதிய மாற்றங்கள்
இம்பாக்ட் பிளேயர் விதியைத் தவிர, டிஎன்பிஎல் டிசிஷன் ரிவியூ சிஸ்டத்தையும் (டிஆர்எஸ்) இந்த முறை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இருப்பினும், அணிகள் வைடுகள் மற்றும் நோ-பால்களுக்கு டிஆர்எஸ் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. கூடுதலாக, பிளேஆப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் ஒதுக்கப்பட உள்ளது. இந்தியாவில் பிராந்திய அளவில் நடக்கும் லீக் போட்டிகளில் டிஎன்பிஎல் ஆனது பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை மிக விரைவாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள மற்ற லீக்குகளும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎல்லின் ஏழாவது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.