INDvsNZ முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்; வீரேந்திர சேவாக்கின் ரெக்கார்டை முறியடித்தார் டிம் சவுத்தி
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி பேட் மூலம் முத்திரை பதித்தார். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) 3வது நாளில் டிம் சவுத்தி 73 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். மூன்றாம் நாள் காலை நியூசிலாந்து 233/7 என்ற நிலையில் இருந்த பிறகு டிம் சவுத்தி களத்திற்கு வந்தார். அவர் ராச்சின் ரவீந்திராவுடன் இணைந்து நியூசிலாந்தின் முன்னிலையை தொடர்ந்து நீட்டினார். முகமது சிராஜ் சவுத்தியை வெளியேற்றுவதற்கு முன் இருவரும் நியூசிலாந்தை 370 ரன்களுக்கு கொண்டு சென்றனர். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஏழாவது அரைசதமாகும். இந்தியாவில் இது அவரது முதல் அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்
டிம் சவுத்தி முதல் இன்னிங்ஸில் மூன்றாவது சிக்ஸ் அடித்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மொத்த சிக்ஸ் எண்ணிக்கையை 92 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கின் 91 சிக்சர்களின் சாதனையை டிம் சவுத்தி முறியடித்தார். முன்னதாக, அவர் சமீபத்தில் இலங்கை தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாராவை (88) கடந்திருந்தார். இதற்கிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சிக்ஸர் பட்டியலில் தற்போது இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 106 போட்டிகளில் 131 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் 107 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டிம் சவுத்தி ஒட்டுமொத்தமாக அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.