டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது. 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை 435/8 என டிக்ளேர் செய்த பிறகு, நியூசிலாந்து 138/7 என்ற நிலையில் தத்தளித்து வருகிறது. நியூசிலாந்து அணி தற்போது 297 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி, டாம் ப்ளண்டெல் உடன் இணைந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதற்கிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் சிக்சர் சாதனையை சவுதி சமன் செய்துள்ளார்.
நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதியின் சாதனை
10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் டிம் சவுதி, தனது கிரிக்கெட் கேரியரில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 78வது சிக்சரை இன்று அடித்தார். இதன் மூலம் தோனியின் சாதனையை சவுதி சமன் செய்துள்ளார். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெய்ர்ன்ஸ் மற்றும் சவுதி ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 70 சிக்சர்களுக்கு மேல் அடித்துள்ள நியூசிலாந்து பேட்டர்கள் ஆவர். முன்னதாக, சவுதி முதல் நாளில் நியூசிலாந்துக்காக 700 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி 700 விக்கெட்டுகளை கடந்திருந்தாலும், 696 விக்கெட்டுகளை மட்டுமே நியூசிலாந்துக்காக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.