37 ஆண்டுகால சாதனையை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்தி
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் சவுத்தி தலைமையில் அந்த அணி வங்கதேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்று வரலாறு படைத்த நிலையில், புதன்கிழமை (டிசம்பர் 6) இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்த இன்னிங்சில் பந்துவீசிய நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி 5.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். மேலும், தனது பந்துவீச்சில் ஒரு ரன்னைக் கூட விட்டுக்கொடுக்காமல் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காத வீரர்கள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி தனது பந்துவீச்சில் ஒரு ரன்னைக் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இதன் மூலம், 37 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார். டிம் சவுத்திக்கு முன்னர், கடைசியாக 1986 இல் ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஸ்லீப் அடிலெய்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காத கடைசி பந்துவீச்சாளர் ஆவார். சுவாரஸ்யமாக, இந்த சாதனையை எட்டிய ஏழு பந்துவீச்சாளர்களில், மூன்று பேர் மதன் லால், பாபு நட்கர்னி மற்றும் விஜய் ஹசாரே ஆகிய இந்திய வீரர்கள் ஆவர். மேலும், டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன் விட்டுக்கொடுக்காமல் விக்கெட் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் ஆவார். நட்கர்னி மற்றும் ஜான் வார்டில் ஆகியோர் இதர பந்துவீச்சாளர்கள் ஆவர்.