Asian Games 2023: முதல் நாளிலேயே பதக்க வேட்டையைத் தொடங்கிய இந்தியா
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்களானது சீனாவின் ஹாங்சௌ மாகாணத்தில் நேற்று தொடங்கியது. நேற்று கோலாகலமாக அறிமுக விழா நடைபெற்றதை தொடர்ந்து, இன்று காலை முதல் போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. முதல் நாளான இன்று தற்போது வரை மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. படகோட்டுதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகிய இரண்டு விளையாட்டுக்களிலேயே இந்த நான்கு பதக்கங்கலை வென்றிருக்கிறது இந்தியா. இதனைத் தவிர்த்து, மகளிர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷூடனான அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. மேலும், நீச்சல் போட்டியில் 100மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன்.
படகோட்டுதல் (Rowing) விளையாட்டில் இரண்டு பதக்கங்கள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டுதலில் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா. படகோட்டுதலில் ஆடவர் லைட்லெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அர்விந்த் சிங் இணை வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது. அதேபோல், படகோட்டுதலில் எட்டு பேர் கொண்ட குழு பிரிவிலும் இந்த அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மேலும், படகோட்டுதலில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த பாபு லால் யாதவ் மற்றும் ராம் லேக் இணையானது வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது. இத்துடன் படகோட்டுதல் போட்டிகளில் மட்டும் மூன்று பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்கள்:
படகோட்டுதல் போட்டிகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சுடுதலிலும் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. தூப்பாக்கிச் சுடுதலில் 10மீ ஏர் ரைபிள் குழு போட்டியில் இந்திய மகளிர் அணியானது வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது. மெகுலி கோஷ், ரமிதா மற்றும் ஆஷி சௌஷ்கி ஆகியோர் குழு பிரிவில் பங்கேற்று இந்தியாவிற்கான வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்கள். மேலும், மகளிர் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ரமிதா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இந்தப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதலிடத்தில், 8 தங்கப் பதக்கங்களுடன் சீனாவும், இரண்டாமிடத்தில் ஒரு தங்கப் பதக்கத்துடன் ஹாங் காங்கும் இடம் பிடித்திருக்கின்றன.
கிரிக்கெட்டில் உறுதியான பதக்க வாய்ப்பு:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று அதிகாலையிலேயே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது பங்களாதேஷ் அணி. இந்திய பௌலர் பூஜ வஸ்திரகரின் மாயாஜாலத்தால் 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்குள்ளாகவே ஆல்அவுட்டானது பங்களாதேஷ். இரண்டாவதாக களமிறங்கிய இந்தியா 8.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை சுலபமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன், நாளை இறுதிப்போட்டியில் மோதவிருக்கிறது இந்தியா. இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.